விநாயகர் சிலைகளை பாசன வாய்க்கால்களில் கரைக்கக் கூடாது: ஆட்சியர் உத்தரவு

விநாயகர் சிலைகளை வாய்க்கால்களில் கரைக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உத்தரவிட்டுள்ளார்.
Updated on
1 min read

விநாயகர் சிலைகளை வாய்க்கால்களில் கரைக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உத்தரவிட்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு தலைமை வகித்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் பேசியதாவது: 
ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழாவில் விநாயகர் சிலைகள் வைக்க திட்டமிட்டுள்ளவர்கள் அதற்கான இட அனுமதி, ஒலிபெருக்கி வைப்பதற்கான அனுமதி போன்றவற்றை அதிகாரிகளிடமும், தீயணைப்பு உள்ளிட்ட துறைகளின் தடையின்மை சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். 
அதன் பிறகு தமிழக அரசால் வழங்கப்படும் பரிந்துரை படிவத்தைப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி.யிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் சிலை அமைக்கப்பட உள்ள இடத்தை தணிக்கை செய்து சம்பந்தப்பட்ட கோட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்வார்கள். அவர்கள் பரிசீலனை செய்து சிலை வைப்பதற்கான அனுமதியை வழங்குவார்கள்.
விநாயகர் சிலைகளை சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்களை வைத்து தயாரிக்கவோ, தடை செய்யப்பட்ட வர்ணங்களை உபயோகப்படுத்தவோ கூடாது. களிமண், இயற்கை வர்ண பொருள்களால் செய்யப்பட்டு இருக்க வேண்டும். மேலும், சிலைகளை அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே கரைக்க வேண்டும். பாசன வாய்க்கால்களில் சிலைகளை கரைக்கக் கூடாது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்ட பொருள்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் தணிக்கையின்போது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் உரிய அனுமதியின்றி விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டாலும், பாசன வாய்க்கால்களில் சிலைகள் கரைக்கப்பட்டாலும் சிலையின் உரிமையாளர் அல்லது பொறுப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
விநாயகர் சிலை அமைக்கப்படும்போது மேற்கூரைகள் தகடுகளாலும், போதிய அளவு தண்ணீருடன் பொதுமக்களின் பாதுகாப்புக்காக அமைக்க வேண்டும். விழாவில் பட்டாசு வெடிக்கக் கூடாது. ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.  
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கவிதா, ஈரோடு கோட்டாட்சியர் என்.முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்கார்த்திக் குமார், அதிகாரிகள் பலர் 
கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com