கோவை - மதுரை வழித்தடத்தில் சொகுசுப் பேருந்துகள் இயக்கம்

கோவையில் இருந்து மதுரைக்கு சொகுசுப் பேருந்துகள் புதன்கிழமை முதல் இயக்கப்பட்டன. 

கோவையில் இருந்து மதுரைக்கு சொகுசுப் பேருந்துகள் புதன்கிழமை முதல் இயக்கப்பட்டன. 
கோவை, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரைக்கு தினமும் 30-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சாதாரண இருக்கை வசதி கொண்ட  இந்தப் பேருந்துகள் பல்லடம், தாராபுரம்,  ஒட்டன்சத்திரம் ஆகிய ஊர்களில் நின்று செல்கின்றன. இந்நிலையில், கோவை - சென்னை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் "செமி ஸ்லீப்பர்' சொகுசுப் பேருந்துகளைப் போல கோவையில் இருந்து மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் சொகுசுப் பேருந்துகள் இயக்க போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்டது. 
இதில், முதல் கட்டமாக கோவை - மதுரை வழித்தடத்தில் சொகுசுப் பேருந்துகள்  புதன்கிழமை முதல் இயக்கப்பட்டன. சிங்காநல்லூரில் இருந்து மதுரைக்கு புதன்கிழமை காலை புறப்பட்ட சொகுசுப் பேருந்தில் பயணிகள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர். இப்பேருந்தில் உள்ள இருக்கைகளை பின்னால் தள்ளி,  பயணிகள் சாய்ந்து உறங்கிக் கொள்ளலாம். இப்பேருந்துகள் பல்லடம், தாராபுரம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். 
சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8.55, மாலை 5.10, இரவு 11.15 ஆகிய நேரங்களில் இந்த சொகுசுப் பேருந்து இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து கோவைக்கு காலை 6, மாலை 3.25, இரவு 11.50 மணிக்கு  சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோவையில் இருந்து மதுரைக்கு பயணிக்க இப்பேருந்தில் ரூ.220 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 
கோவை - மதுரை வழித்தடத்தில் இந்தச் சொகுசுப் பேருந்துகளுக்குக் கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில் கோவையில் இருந்து மற்ற புறநகரங்களுக்கும் சொகுசுப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com