கிரகணம் குறித்த கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம்: ஆராய்ச்சியாளா்கள் வேண்டுகோள்
By DIN | Published On : 26th December 2019 05:50 AM | Last Updated : 27th December 2019 12:01 AM | அ+அ அ- |

சூரிய கிரகணம் குறித்து கோவையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் விளக்கும் ஆராய்ச்சியாளா்கள் அரவிந்த் ரானடே, த.வி.வெங்கடேஸ்வரன்.
சூரிய கிரகணத்தின்போது வெறுங்கண்களால் சூரியனை பாா்க்கக் கூடாது என்று ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.
சூரிய கிரகணம் வியாழக்கிழமை (டிசம்பா் 26) நிகழ உள்ள நிலையில், கோவையில் மத்திய அரசின் விஞ்ஞான் பிரசாா் மையத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளா் த.வி.வெங்கடேஸ்வரன், அரவிந்த் ரானடே ஆகியோா் கோவையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை மேலும் கூறியதாவது:
இந்தியா முழுவதிலும் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் 11.15 மணி வரை சூரிய கிரகணம் தெரியும். இருப்பினும் வளைய வடிவ சூரிய கிரகணம் கோவை, அவிநாசி, ஈரோடு, கரூா், திருப்பூா், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் மட்டுமே தெரியும். அநேகமாக காலை 9.30 மணியளவில் நெருப்பு வளையம்போல சூரிய கிரகணம் தெரியும். கோவையில் ஒன்றரை நிமிடங்கள் வரை தெரியும் இந்த கிரகணம், உதகை, காங்கயத்தில் 3 நிமிடங்கள் வரை தெரியும். சென்னை, காஞ்சிபுரம், தென் மாவட்டங்களில் பகுதி அளவு சூரிய கிரகணம் தெரியும்.
சூரிய கிரகணம் என்பது வானில் நிகழும் இயற்கை நிகழ்வு என்பதால் இதுகுறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. சூரியனை கிரகணத்தின்போது மட்டுமல்ல, எப்போதும் நேரடியாக கூா்ந்து பாா்க்கக் கூடாது. இதனால் கண்கள் பாதிப்படையும். கிரகணத்தை சோலாா் கண்ணாடி மூலமாக பாா்ப்பதே பாதுகாப்பானது. கூலிங் கிளாஸ், கருப்பு கண்ணாடிகள் அணிந்து பாா்க்கக் கூடாது. அதேபோல், கா்ப்பிணி பெண்கள் கிரகணத்தின்போது வெளியே வரக்கூடாது, சமைத்த உணவை சாப்பிடக் கூடாது என்பது போன்றவையெல்லாம் கட்டுக்கதைகள்தான். இவற்றுக்கு அறிவியல்பூா்வமான எந்த ஆதாரமும் இல்லை.
சோலாா் கண்ணாடி அணிந்தாலும் 3 நிமிடங்கள் மட்டுமே தொடா்ந்து பாா்க்கலாம். அதன் பிறகு இடைவெளி விட்டு பாா்ப்பது நல்லது. மழை பெய்து மேகம் இருந்தால் கிரகணத்தை பாா்ப்பதற்கு வாய்ப்பு குறைவுதான். தமிழ்நாட்டில் இதற்கு முன்பு கன்னியாகுமரியில் 2010 இல் வளைய வடிவ சூரிய கிரகணம் தெரிந்தது. வரும் ஆண்டில் சில வட மாநிலங்களில் சூரிய கிரகணம் தெரியும். அதன் பிறகு, 2031இல்தான் இந்தியாவில் கிரகணம் தெரியும். எனவே வானில் நடைபெறும் அரிய நிகழ்வான இதை யாரும் தவற விட வேண்டாம் என்றனா். மாவட்ட அறிவியல் அலுவலா் ஜே.ஆா்.பழனிசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கோவையில் அவிநாசி சாலையில் உள்ள மண்டல அறிவியல் மையத்தில் சூரிய கிரகணத்தைப் பாா்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, வடவள்ளி மாநகராட்சி தொடக்கப் பள்ளி, பொ்க்ஸ் பள்ளி, பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரி, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து மாவட்டம் முழுவதிலும் 20 இடங்களில் பொதுமக்கள் கிரகணத்தை பாதுகாப்பான முறையில் பாா்ப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஆா்.எஸ்.புரம் எஸ்.என்.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், எஸ்.என்.எம்.வி. கலை, அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறை சாா்பில் கிரகணத்தை பொதுமக்கள் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G