சுற்றுலா, வாடகை கார் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 06th February 2019 06:33 AM | Last Updated : 06th February 2019 06:33 AM | அ+அ அ- |

சென்னையில் வாடகை கார் ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலைக்குக் காரணமான காவல் துறையினரின் நடவடிக்கையைக் கண்டித்து கோவையில் சுற்றுலா, வாடகை கார் ஒட்டுநர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே கோவை மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாலைப் போக்குவரத்து சம்மேளன பொதுச் செயலாளர் எஸ்.மூர்த்தி தலைமை வகித்தார்.
இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வாடகை கார் ஓட்டுநர் ராஜேஷ், சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்திற்காக வாகனத்தை ஓட்டி வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் பெண் ஊழியர் ஒருவரை காரில் ஏற்றிக் செல்வதற்காக பாடி அருகே காத்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த காவல் துறையினர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி காரை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் மன வேதனையடைந்த கார் ஓட்டுநர் ராஜேஷ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவரது செல்லிடப்பேசியில் பதிவு செய்து இருந்த பதிவுகளின் அடிப்படையில், ஓட்டுநர் ராஜேஷின் தற்கொலைக்கு காவல் துறையினர் காரணம் என்பது
கண்டறியப்பட்டது.
ஆகவே, வாடகை வாகன ஓட்டுநர்களை தரக் குறைவாக நடத்தும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
ஓட்டுநர் உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகி ராஜு, கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கத்தின் நிர்வாகி மோகன்ராஜ், சிஐடியூ சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வேணுகோபால், ஏஐடியூசி நிர்வாகி கனேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தைத் தொடர்ந்து டாக்ஸி ஓட்டுநர்கள் செவ்வாய்க்கிழமை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...