ஆயுர்வேத சிகிச்சைக்கான தொகையை வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு

ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான  மருத்துவ காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்
Updated on
1 min read

ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான  மருத்துவ காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
  கோவை சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்மோகன் உன்னி (66). இவர்  2013இல் தனியார் காப்பீடு நிறுவனத்தில் ரூ. 3 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு செய்திருந்தார்.  இவர் 2013 ஜூலையில் கழுத்து தொடர்பான பிரச்னைக்கு கோவையில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதற்கான கட்டணமாக ரூ. 56 ஆயிரத்தை ராம்மோகன் செலுத்தியுள்ளார். பின்னர் இதற்கான காப்பீட்டு தொகை கேட்டு காப்பீடு நிறுவனத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஆனால், ஆயுர்வேத மருத்துவமனையில் எடுக்கப்படும் சிகிச்சைகளுக்கு காப்பீட்டு தொகை வழங்க முடியாது எனக்கூறி அவரது விண்ணப்பத்தை அந்நிறுவனம் நிராகரித்தது.
   இது குறித்து கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ராம்மோகன் உன்னி வழக்குத் தொடர்ந்தார்.  இவ்வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நுகர்வோர் ஆணையத் தலைவர் பாலச்சந்திரன், உறுப்பினர்கள் அமுதா, பிரபாகர் ஆகியோர் மனுதாரர் ராம்மோகன் உன்னி சிகிச்சை பெற்ற கட்டணமான ரூ. 56 ஆயிரத்து 123 தொகையையும், அவர் அடைந்த மனஉளைச்சலுக்கு ரூ. 20 ஆயிரத்தையும்  9 சதவீத வட்டியுடனும், வழக்கு செலவுக்காக ரூ. 3 ஆயிரத்தையும் தனியார் காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com