கடமான் இறைச்சி வைத்திருந்த ஆதிவாசிக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்
By DIN | Published On : 12th February 2019 06:17 AM | Last Updated : 12th February 2019 06:17 AM | அ+அ அ- |

ஆனைகட்டி பகுதியில் கடமான் இறைச்சியை வைத்திருந்த ஆதிவாசிக்கு வனத் துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
கோவை வனச் சரகத்துக்கு உள்பட்ட ஆனைகட்டி மத்திய சுற்றில் அதிரடிப் படையினர், வனப் பணியாளர்கள் அடங்கிய கூட்டுக் குழுவினர் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர். அப்போது, தூமனூர் மலைவாழ் மக்கள் விவசாய நிலப்பகுதி அருகே மாமரத்து பள்ளம் என்ற இடத்தில் அதிரடிப் படையினரைப் பார்த்ததும் தூமனூரை சேர்ந்த ரங்கசாமி ( 50) அங்கிருந்து ஓடியுள்ளார். ரோந்து சென்ற வனத் துறையினர் அவரைத் துரத்திப் பிடித்து சோதனையிட்டனர். அப்போது, அவரிடம் கடமானின் கால்கள், இறைச்சி இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், செந்நாய்களால் கொல்லப்பட்ட மானின் மீதமுள்ள இறைச்சியை சமைத்துச் சாப்பிட அவர் எடுத்து வந்ததாகத் தெரியவந்தது. வனப் பாதுகாப்பு சட்டப் பிரிவின்படி ரங்கசாமியிடம் இருந்து ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.