கணக்கெடுப்பில் 150க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டன
By DIN | Published On : 12th February 2019 06:21 AM | Last Updated : 12th February 2019 06:21 AM | அ+அ அ- |

கோவையில் வனத் துறையினர், இயற்கை ஆர்வலர்கள் இணைந்து நடத்திய பறவைகள் கணக்கெடுப்பு மூலமாக 150க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
வனத் துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பறவைகள் சரணாலயங்களில் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் கோவையில் உள்ள நீர்நிலைகள் நிரம்பின. இதையடுத்து இங்கு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது. எனவே, கோவையில் உள்ள நீர்நிலைகளிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்த வனத் துறையினர் முடிவு செய்தனர். இதன்படி பிப்ரவரி 7, 8 ஆகிய தேதிகளில் வனத் துறையினருடன் கோவையில் உள்ள பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் இணைந்து இந்தக் கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டனர்.
செங்குளம் நீர்நிலையில் புள்ளிமூக்கு வாத்து, ஊசிவால் வாத்து உள்ளிட்ட 5 வாத்து இனங்கள் கணக்கிடப்பட்டன. இதேபோல பொரி வல்லூறு, வெள்ளை வாலாட்டி, சோலாக் குருவி, நீளவால் பஞ்சுருட்டான் உள்ளிட்டவை வழக்கத்தை விட அதிக அளவில் காணப்பட்டன.
வெள்ளலூர் நீர்நிலையில் புள்ளியலகு கூழைக்கிடாவின் கூடுகள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டன. உக்கடம் பெரியகுளத்தில் அதிகப்படியாக 1,056 பறவைகளும், வெள்ளலூரில் 75 பறவை இனங்களும், கிருஷ்ணம்பதியில் 72 பறவை இனங்களும், வாளையாரில் 67 பறவை இனங்களும் கணக்கிடப்பட்டன. உக்குளம் நீர்நிலையில் குறைந்தபட்சமாக 16 பறவை இனங்கள் கணக்கிடப்பட்டன. கண்ணம்பாளையம் நீர்நிலையில் சூறைக் குருவியும், தூக்கனாங் குருவிகளும் நூற்றுக்கணக்கான அளவில் காணப்பட்டன. மொத்தமாக இரண்டு நாள்கள் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில் 150க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கணக்கிடப்பட்டதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.