குட்கா ஆலையில் கைப்பற்றப்பட்ட பொருள்களை ஒப்படைக்க உத்தரவு
By DIN | Published On : 12th February 2019 06:22 AM | Last Updated : 12th February 2019 06:22 AM | அ+அ அ- |

சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் உள்ள குட்கா ஆலையில் கைப்பற்றப்பட்ட பொருள்களை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் ரகசியமாக இயங்கி வந்த குட்கா தொழிற்சாலைக்கு கடந்த வருடம் ஆகஸ்ட் 27ஆம் தேதி சூலூர் போலீஸார் சீல் வைத்தனர். ஆலையில் இருந்த குட்கா பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட அனைத்துப் பொருள்களும் சூலூர் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆலையின் உரிமையாளரான புதுதில்லியை சேர்ந்த அமித் ஜெயின், கைப்பற்றப்பட்ட பொருள்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, குட்கா ஆலையில் கைப்பற்றப்பட்ட பொருள்களை அமித் ஜெயினிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், அமித் ஜெயின், ஆலையின் மேலாளர் ரகுராமன் ஆகியோர் சூலூர் நீதிமன்றத்துக்கு வந்து உயர் நீதிமன்ற உத்தரவு நகலை தங்களது வழக்குரைஞர் மூலம் திங்கள்கிழமை ஒப்படைத்ததாகத் தெரிகிறது. இது குறித்து சூலூர் போலீஸார் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட பாக்குத் துகள்கள், மடிக்கணினி, ஆலையின் அலுவலகப் பொருள்கள் அனைத்தும் ஓரிரு வாரங்களில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்தனர்.