"சின்னத்தம்பி' நலமுடன் இருக்க யானைக் கோயிலில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 12th February 2019 06:19 AM | Last Updated : 12th February 2019 06:19 AM | அ+அ அ- |

சின்னத்தம்பி யானை நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஆனைகட்டி அருகே பனப்பள்ளி கிராமத்தில் உள்ள யானைக் கோயிலில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
ஆனைகட்டி, சின்னத்தடாகம் பகுதியில் சுற்றித் திரிந்த சின்னத்தம்பி என்ற யானையை வனத் துறையினர் கடும் போராட்டத்துக்குப் பிறகு பிடித்து டாப்சிலிப் பகுதி வனப் பகுதியில் விடுவித்தனர். ஆனால், அந்த யானை அங்கிருந்து 100 கி.மீ. தொலைவுக்கு வனப் பகுதி வழியாக பயணித்து ஆழியாறு, அங்கலக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்கள் வழியாகச் சென்று தற்போது உடுமலை பகுதியில் சுற்றித் திரிகிறது.
தடாகம் பகுதியில் சுற்றித் திரிந்தபோது குறும்புக்கார யானையாக இருந்த சின்னத்தம்பி, உடுமலைப் பகுதியில் தற்போது மிகுந்த சாதுவாக மாறிவிட்டது. தன்னைப் பிடிக்க வந்த கும்கி யானைகளிடம் கூட கொஞ்சி குலவுகிறது. இதனால், சின்னத்தம்பி மக்களிடையே மிகுந்த விருப்பத்திற்குரிய விலங்காக மாறிவிட்டது. வனவியல் ஆராய்ச்சியாளர்கள், சின்னத்தம்பியைப் பிடித்து கும்கியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வரும்வேளையில் பொதுமக்கள் அதை மீண்டும் சின்னத்தடாகம் பகுதியில் விட்டுவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சின்னத்தம்பி நலமுடன் இருக்க வேண்டி இரண்டு நாள்களுக்கு முன்பு பனப்பள்ளி கிராமத்தில் உள்ள யானைக் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இது குறித்து கோயில் பூசாரி பதுவன் கூறியதாவது:
எங்கள் முன்னோர்களால் கட்டப்பட்ட இந்தக் கோயிலில் யானைகளின் நலனுக்காக வாரத்திற்கொரு முறை பூஜைகள் செய்வோம். இங்குள்ள யானையின் சிலை காரமடையிலிருந்து எங்கள் மூதாதையர்கள் வாங்கி வந்தது. எங்கள் நிலத்தில் விளையும் பயிர்களை யானையின் சிலைக்குப் படையலிட்டு வழிபடுவோம். யானைகளைப் பொருத்தவரையில் நாமாக அதற்குத் தொந்தரவு தரும்வரை அவை யாரையும் ஒன்றும் செய்யாது.
சின்னத்தம்பி கூட இங்கு வந்தபோது எங்களுக்கும் மிச்சம் வைத்துவிட்டு சாப்பிட்டுப் போ என்றுதான் கூறினோம். ஆனால் அது எல்லா தானியங்களையும் சாப்பிட்டுக் கொண்டிருக்க என் மனைவி வெளியில் வந்து எங்களுக்கும் மிச்சம் வேண்டும் போ என்ற கூறியதையடுத்து உடனடியாகச் சென்றுவிட்டது. நல்ல பண்புள்ள அந்த யானைக்கு எதும் நேரக்கூடாது என்ற வேண்டுதலோடுதான் பூஜை நடத்தினோம் என்றார்.
பூஜையில் கலந்து கொண்ட பொதுமக்களும், குழந்தைகளும் சின்னத்தம்பியை கும்கியாக மாற்றாமல் மீண்டும் எங்கள் பகுதிக்கே கொண்டு வந்து விட்டுவிட வேண்டும் என கூறியுள்ளனர்.