ஆளுநரின் கோவை வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பேருக்கு அபராதம்
By DIN | Published On : 04th January 2019 07:14 AM | Last Updated : 04th January 2019 07:14 AM | அ+அ அ- |

தமிழக ஆளுநரின் கோவை வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பேருக்கு தலா ரூ.ஆயிரம் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கு.இராமகிருட்டிணன் (68), ஆறுச்சாமி (69), சாஜித் (41), கோபால் (50), ஆனந்த் (42), உமேஷ் (64) உள்ளிட்டோர் அவிநாசி சாலையில் 2017 நவம்பர் 14 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி இவர்களை ரேஸ்கோர்ஸ் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை நீதித்துறை நடுவர் மன்றத்தில்(எண்.3) விசாரிக்கப்பட்டு வந்தது. இறுதி விசாரணையின்போது 6 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து 6 பேருக்கும் தலா ரூ.ஆயிரம் அபராதம் விதித்து நீதித்துறை நடுவர் வி.பி.வேலுசாமி வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். அரசுத் தரப்பில் வழக்குரைஞர் தி.ர.ரேவதி ஆஜரானார்.