சங்கனூர் பள்ளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 130 வீடுகள் அகற்றம்
By DIN | Published On : 04th January 2019 07:14 AM | Last Updated : 04th January 2019 07:14 AM | அ+அ அ- |

கோவை, சங்கனூர் பள்ளத்தையொட்டி மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 130 வீடுகள் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 10 ஆவது வார்டு சங்கனூர் பள்ளம் அருகே வ.உ.சி. சாலை பெரியார் நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து 174 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந்த வீடுகளை காலி செய்ய அறிவுறுத்தி மாநகராட்சி தரப்பில் சில மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
மேலும் இங்கு குடியிருந்து வந்தவர்களுக்கு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் கீரணத்தம் பகுதியில் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதையடுத்து, ஆக்கிரமிப்புதாரர்கள் வீடுகளை காலி செய்து ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் குடியேறினர். இதைத் தொடர்ந்து, வீடுகளுக்கு அளிக்கப்பட்ட மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதில் 44 பேர் வீடுகளை காலி செய்யாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், மாநகராட்சி செயற்பொறியாளர் (திட்டம்) ரவிச்சந்திரன், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சிப் பணியாளர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் 130 வீடுகளை வியாழக்கிழமை இடித்து அகற்றினர். மீதமுள்ள வீடுகளை ஆக்கிரமிப்புதாரர்கள் காலி செய்யாத காரணத்தால் அந்த வீடுகள் இடிக்கப்படவில்லை.
மேலும் காலி செய்யாத ஆக்கிரமிப்புதாரர்கள் வீடுகளை இடிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ஆக்கிரமிப்புதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வீடுகளை காலி செய்ய மேலும் ஒரு நாள் அவகாசம் அளிக்கப்பட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.