பயோ மெட்ரிக் வருகைப் பதிவு சோதனை அடிப்படையில் அமல்: அனைத்துப் பள்ளிகளிலும் அமல்படுத்த இன்று ஆலோசனை
By DIN | Published On : 04th January 2019 07:13 AM | Last Updated : 04th January 2019 07:13 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் 2 அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டத்தை மற்ற பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவது தொடர்பாக வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை அமல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அறிவித்தார். இதையடுத்து கடந்த நவம்பர் மாதத்தில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் 3,688 உயர்நிலைப் பள்ளிகள், 4,040 மேல்நிலைப் பள்ளிகள் என 7,728 பள்ளிகளில் ரூ.15.30 கோடி செலவில் பயோ மெட்ரிக் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து சென்னையிலும், பெரம்பலூரிலும் தலா ஒரு பள்ளிகளில் இந்தத் திட்டம் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இரண்டு பள்ளிகளில் புதன்கிழமை முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
கோவை, ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், அசோகபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் இந்த பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஒத்தக்கால்மண்டபம் பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட 40 பேரும், அசோகபுரம் பள்ளியில் பணியாற்றும் 55 ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்களும் இந்த முறையில்தான் வருகையைப் பதிவு செய்து வருகின்றனர். இதன் மூலம் ஆசிரியர்கள், பணியாளர்கள் வேலைக்கு வந்து செல்லும் நேரம் துல்லியமாகப் பதிவு செய்யப்படுகிறது.
இந்தக் கருவியைப் பொருத்த சுமார் ரூ.9,500 வரை செலவாகும் நிலையில், ஆசிரியர்களைத் தொடர்ந்து மாணவர்களுக்கும் இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்துக்காக அரசு நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த இரு பள்ளிகளிலும் முன்னாள் மாணவர் சங்கம், பள்ளி மேலாண்மைக் குழுவின் உதவியுடன்தான் இந்த கருவிகள் பொருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறும்போது, பயோ மெட்ரிக் முறையை இதர அரசுப் பள்ளிகளிலும் அமல்படுத்த உள்ளோம். இதற்காக தலைமை ஆசிரியர்களுடனான கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. ஆசிரியர்களைத் தொடர்ந்து மாணவர்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். பயோ மெட்ரிக் கருவிகளை வாங்க பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தன்னார்வலர்களையும், சமூகப் பணித் திட்டங்களுக்கு செலவிடும் தனியார் நிறுவனங்களையும் அணுகலாம் என்றார்.