பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி பீடிகள் தயாரித்த இருவர் கைது
By DIN | Published On : 04th January 2019 07:12 AM | Last Updated : 04th January 2019 07:12 AM | அ+அ அ- |

கோவை அருகே கருமத்தம்பட்டியில் புதன்கிழமை பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி பீடிகள் தயாரித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
கருமத்தம்பட்டி, சோமனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தங்களது நிறுவனத்தின் பெயரில் போலி பீடிகள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுவதாக பிரபல நிறுவனத்தினருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தினர், அப்பகுதியில் தங்கள் நிறுவனத்தின் பெயரில் போலி பீடிகள் தயாரித்து விற்ற இருவர் குறித்து கருமத்தம்பட்டி போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர்.
இதனை அடுத்து பல்லடம், நல்லாகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் தெய்வசிகாமணி (44), தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியைச் சேர்ந்த அருணாசலம் மகன் முத்துராஜ் (32) ஆகிய இருவரை பிடித்து சோதனை செய்தனர். இதில் அவர்களிடமிருந்து 12 போலி பீடி பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கருமத்தம்பட்டி போலீஸார், இருவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.