மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்
By DIN | Published On : 04th January 2019 07:10 AM | Last Updated : 04th January 2019 07:10 AM | அ+அ அ- |

கோவை அருகே இருகூரில் மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் பயனாளிக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் அறிமுக விழா இருகூரில் நடைபெற்றது. இதற்கு பாஜக இருகூர் மண்டலத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக தேசிய தென்னை நார் வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளை வழங்கி பேசியதாவது:
மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் பொதுமக்கள் ரூ. 5 லட்சம் வரையிலும் இலவசமாக தனியார் மருத்துவமனை உள்பட எல்லா மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறும் திட்டத்தினை மோடி அறிவித்துள்ளார்.
இதற்கான அட்டைகள் தபால் துறை மூலம் பயனாளிகளின் முகவரிக்கே கொண்டு சென்று விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இருகூரில் 5,550 குடும்பத்தினரின் வீடுகளுக்கு தபால் துறை மூலம் இந்த மருத்துவ காப்பீடு அட்டை விநியோகிக்கப்படும்.
மேலும், பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 12 செலுத்தி ரூ. 2 லட்சம் வரையிலான விபத்து காப்பீடு பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
இதே போல அரசூரிலும் விழா நடத்தப்பட்டு பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் கோவை வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் கோபால்சாமி, சூலூர் ஒன்றியத் தலைவர் பரமசிவம், ஒன்றியச் செயலாளர் கலங்கல் மணி, சூலூர் நகரத் தலைவர் ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.