மார்க்சிஸ்ட் கொடிக் கம்பம் வெட்டி சாய்ப்பு: இருவரிடம் விசாரணை
By DIN | Published On : 04th January 2019 07:15 AM | Last Updated : 04th January 2019 07:15 AM | அ+அ அ- |

கோவை, வரதராஜபுரம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி கம்பத்தை வெட்டி சாய்த்ததாக இருவரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை, வரதராஜபுரம் மேடு அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகே அமைக்கப்பட்டு இருந்த கட்சிக் கொடி கம்பத்தை அடையாளம் தெரியாத சிலர் வெட்டி சாய்த்து, கொடிக்கு தீ வைத்துள்ளனர்.
அதில் தப்பி ஓடியவர்களில் இருவர் மட்டும் அருகில் உள்ள வீட்டுக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வீட்டுக்குள் இருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், நீலிக்கோணம்பாளையம் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சௌமியா நாராயணன், பரத் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதேபோல நீலிக்கோணம்பாளையம் அருகே துளசியம்மாள் லே அவுட் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கொடி கம்பத்தையும் மர்ம நபர்கள் வெட்டி சாய்த்துள்ளனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் தெய்வேந்திரன், செல்வராஜ் ஆகியோர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.