வீடு கட்டுவதில் அலட்சியம்: கட்டட ஒப்பந்ததாரருக்கு ரூ.1.27 லட்சம் அபராதம்
By DIN | Published On : 04th January 2019 07:15 AM | Last Updated : 04th January 2019 07:15 AM | அ+அ அ- |

வீடு கட்டுவதில் அலட்சியம் காட்டிய கட்டட ஒப்பந்ததாரருக்கு ரூ. 1.27 லட்சம் அபராதம் விதித்து கோவை நுகர்வோர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கோவை, கணபதி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுகுட்டி. இவர் 2010 ஆம் ஆண்டு அதே பகுதியில் வீடு கட்டுவதற்காக சரவணம்பட்டியைச் சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் மூர்த்தி என்பவருடன் ரூ. 9 லட்சத்து 13 ஆயிரத்துக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். வீட்டின் கட்டுமானப் பணிகள் நடந்து வந்த நிலையில் ஆறுகுட்டியிடம் முழுத் தொகையையும் மூர்த்தி வாங்கியுள்ளார். ஆனால், வீட்டின் பணிகள் நிறைவு பெறாமல் இருந்துள்ளது. இதுதொடர்பாக கேட்டபோது கூடுதலாக ரூ.99 ஆயிரம் பணம் கொடுத்தால் ஆறு மாதத்துக்குள் பணிகளை முடித்து தருவதாக மூர்த்தி கூறியுள்ளார். இதை நம்பி ஆறுகுட்டி ரூ.99 ஆயிரம் கூடுதலாகக் கொடுத்தார். இருப்பினும் வீட்டின் கட்டுமானப் பணிகள் நிறைவுபெறவில்லை.
இதையடுத்து ஆறுகுட்டி கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையத் தலைவர் பாலச்சந்திரன், உறுப்பினர்கள் அமுதா, பிரபாகர் ஆகியோர் மனுதாரரிடம் கூடுலாக வாங்கியத் தொகையான ரூ.99 ஆயிரத்தை 9 சதவீத வட்டியுடனும், மனுதாரரின் மன உளைச்சலுக்கு ரூ.25 ஆயிரமும், வழக்குச் செலவுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்க மூர்த்திக்கு உத்தரவிட்டு வியாழக்கிழமை தீர்ப்பளித்தனர்.