சபரிமலை விவகாரம்: ரயில் மறியலுக்கு முயன்ற 25 பேர் கைது
By DIN | Published On : 07th January 2019 08:47 AM | Last Updated : 07th January 2019 08:47 AM | அ+அ அ- |

சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைந்ததைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சக்தி சேனா அமைப்பினர் 25 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம்பெண்கள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ததையடுத்து, கேரள அரசைக் கண்டித்து தமிழகம், கேரளப் பகுதிகளில் இந்து அமைப்புகள் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சக்தி சேனா அமைப்பினர் கோவையில் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
போராட்டத்துக்கு அமைப்பின் தலைவர் அன்புமாரி தலைமை வகித்தார்.
போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்ததையடுத்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் ரயில் நிலையத்தின் முன்பு கூடி கேரள அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாகக் கூறி சக்தி சேனா அமைப்பின் தலைவர் அன்புமாரி, மாவட்டத் தலைவர் காளிதாஸ் உள்ளிட்ட 25 பேரை போலீஸார் கைது செய்தனர்.