சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை, உறவினர் கைது
By DIN | Published On : 07th January 2019 08:47 AM | Last Updated : 07th January 2019 08:47 AM | அ+அ அ- |

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை மற்றும் உறவினரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் தெலுங்குபாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பெண்களுக்கான பாதுகாப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவறான தொடுதல் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது 13 வயதான எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து குழந்தைகள் பாதுகாப்புக் குழு அதிகாரிகளிடம் கூறினார். இதில், தனது தந்தையும், அவரது இரண்டு சகோதரர்களும் சேர்ந்து 2015 ஆம் ஆண்டுமுதல் தனக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் அளித்து வந்ததாக புகார் தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள் அந்த சிறுமியை மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் தங்க வைத்தனர். இதுதொடர்பாக செல்வபுரம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் வீட்டுக்கு விரைந்த போலீஸார் அவரது தந்தை ஏசுராஜன் (35), அவரது சகோதரர் ஏசு (28) ஆகியோரைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள உறவினர் டேவிட் என்பவரைத் தேடி வருகின்றனர்.