மேட்டுப்பாளையம் பகுதியில் காதலர்களை கொலை செய்த வழக்கில் இளைஞரை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க போலீஸாருக்கு கோவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
கோவை, மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஸ்ரீரங்கராயன் ஓடைப் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (22). இவர், அதே பகுதியில் வசித்து வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணை காதலித்தார். இதனால் ஆத்திரமடைந்த கனகராஜின் சகோதரர் வினோத்குமார் (24), கடந்த 25ஆம் தேதி கனகராஜ், வர்ஷினி பிரியாவை அரிவாளால் வெட்டினார்.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் உயிரிழந்தனர். இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸார் வினோத்குமார், அவருக்கு உடந்தையாக இருந்த 3 பேர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக கூடுதல் தகவல் பெற வினோத்குமாரை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி, மேட்டுப்பாளையம் போலீஸார், கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி ஆர். சக்திவேல் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வினோத்குமாரை 3 நாள் காவலில் விசாரிக்க போலீஸாருக்கு அனுமதியளித்தார்.
இதையடுத்து மேட்டுப்பாளையம் போலீஸார் வினோத்குமாரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.