தொழிலாளியைத் தாக்கியவரை கைது செய்யக் கோரி சாலை மறியல்
By DIN | Published On : 03rd July 2019 09:15 AM | Last Updated : 03rd July 2019 09:15 AM | அ+அ அ- |

தேங்காய் உரிக்கும் தொழிலாளியைத் தாக்கியவர்களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யக் கோரி பொள்ளாச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சார்ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
பொள்ளாச்சியை அடுத்த காளிபாளையத்தைச் சேர்ந்தவர் பர்வதகண்ணன் (35). விவசாயி. இவரது தோட்டத்தில் தேங்காய் உரிப்பதற்காக ராசிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த செல்லமுத்து, முத்துசாமி உள்பட 14 பேர் திங்கள்கிழமை சென்றுள்ளனர். காலை 9 மணியில் இருந்து தேங்காய் உரித்துள்ளனர்.
தேங்காய் உரிக்கும் இடத்துக்கு அருகே தென்னை நார் கொட்டி வைக்கப்பட்டிருந்ததால், தேங்காய் உரிப்பவர்கள் யாரும் புகைப்பிடிக்கக் கூடாது என தோட்டத்து உரிமையாளர் பர்வதகண்ணன் தொழிலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முத்துசாமி என்ற தொழிலாளி மாலையில் புகைப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதைப்பார்த்த தோட்டத்தின் மேலாளர் நாச்சிமுத்து (55), தோட்டத்து உரிமையாளர் பர்வதகண்ணன், அவரது மனைவி நந்தனா (30) ஆகியோர் முத்துசாமியை கண்டித்துள்ளனர். மேலும் பர்வதகண்ணன், முத்துசாமியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது அதனை தடுக்கச் சென்ற செல்லமுத்துவையும் தென்னை மட்டையால் தாக்கியதாகத் தெரிகிறது. இதுகுறித்து, பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில், செல்லமுத்து புகார் தெரிவித்தார்.
அதேபோல, செல்லமுத்து, முத்துசாமி ஆகியோர் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தோட்டத்து மேலாளர் நாச்சிமுத்து புகார் அளித்தார். இதனால் இருதரப்பினர் அளித்த புகார்கள் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தென்னை தொழிலாளர் பேரவை, ஆதித் தமிழர் பேரவை, மக்கள் விடுதலை முன்னணி, தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் காந்தி சிலையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை பேரணியாக சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது சார்ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, சார் ஆட்சியர் அலுவலகத்துக்குள் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு வளாகத்தில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
தேங்காய் உரிக்கும் தொழிலாளியைத் தாக்கிய பர்வத கண்ணனை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், பர்வதகண்ணனை கைது செய்வதாக தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.