ஈரோட்டில் போலி மதுபான ஆலை நடத்திய 7 பேர் கைது: மது பாட்டில்கள், வாகனங்கள் பறிமுதல்
By DIN | Published On : 15th July 2019 09:44 AM | Last Updated : 15th July 2019 09:44 AM | அ+அ அ- |

பெருந்துறை அருகே போலி மதுபான ஆலை நடத்திய 7 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள், வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே திருவாச்சி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே போலி மதுபான ஆலை செயல்பட்டு வருவதாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசனுக்கு தகவல் கிடைத்தது.
அவருடைய உத்தரவின்பேரில் ஈரோடு மதுவிலக்கு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை காலை அங்கு திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள ஒரு அரிசி ஆலைக்குள் போலீஸார் நுழைந்தவுடன், அங்கிருந்தவர்கள் தப்பிச் செல்ல முயன்றனர்.
இதைத் தொடர்ந்து, அந்த கும்பலை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அதைத் தொடர்ந்து, அங்கு சோதனையிட்டபோது, அனுமதியின்றி மதுபானம் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிடிபட்டவர்களை ஈரோடு மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிடிபட்டவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுசாலை கிராமம், சென்னசத்திரம் பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (42), ஈரோடு, திண்டல் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் (45), சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே சின்னப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பன் மகன் குமார் (29), அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் வெங்கடாசலம் (29), அர்த்தநாரி (33), ஈரோடு மாவட்டம், பவானி தேவபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (44), பவானி, கொக்காரம்மன் நகரைச் சேர்ந்த சரவணகுமார் (32) ஆகியோர் போலி மதுபானங்களை தயாரித்தது தெரியவந்தது.
இதையடுத்து, 7 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இதில் கைதான சம்பத்குமார் ஏற்கெனவே வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசியைக் கடத்திய வழக்கில் தொடர்புடையவர் ஆவர். தற்போது போலி மதுபான ஆலையை நடத்தி வந்துள்ளார்.
கைதான கும்பலிடம் இருந்து 2,856 போலி மதுபாட்டில்கள், மதுபானம் தயாரிக்கப் பயன்படும் இயந்திரங்கள், காலி மதுபாட்டில்கள், 2 பேரல்கள், 30 லிட்டர் எரிசாராயம், 3 வாகனங்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தைச் சேர்ந்த ஜெகதீசன், பெங்களூரைச் சேர்ந்த ராமு ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.