12 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்; ரூ.12 லட்சம் அபராதம் வசூல்
By DIN | Published On : 09th June 2019 03:06 AM | Last Updated : 09th June 2019 03:06 AM | அ+அ அ- |

கோவை மாநகரப் பகுதிகளில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை 12 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ரூ.12,40,460 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு மற்றும் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட கடைகள், வியாபார நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு, விற்பனையைத் தடுக்கும் பொருட்டு மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர்.
அதன்படி, கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 5 மண்டலங்களில், ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை வடக்கு மண்டலத்தில் 3,142 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டு 848 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 4,31,700 அபராதம் வசூலிக்கப்பட்டது.
தெற்கு மண்டலத்தில் 3,726 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1,19,000 அபராதம் வசூலிக்கப்பட்டது. கிழக்கு மண்டலத்தில் 5,530 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 2,04,800 அபராதம் வசூலிக்கப்பட்டது.
மேற்கு மண்டலத்தில் 1,402 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.2,71,650 அபராதம் வசூலிக்கப்பட்டது. மத்திய மண்டலத்தில் 745 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.2,13,310 அபராதம் வசூலிக்கப்பட்டது.