கோயில் உண்டியலை உடைத்து திருட்டு
By DIN | Published On : 09th June 2019 03:05 AM | Last Updated : 09th June 2019 03:05 AM | அ+அ அ- |

மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் உள்ள வேணுகோபால் சுவாமி கோயில் உண்டியலை உடைத்து ரூ.3 ஆயிரம் மதிப்பிலான பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இக்கோயில் அர்ச்சகர் மோகன் வழக்கம்போல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு கோயில் நடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மீண்டும் சனிக்கிழமை காலை கோயிலுக்கு வந்து பார்த்தபோது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோயில் அதிகாரிகளுக்கு அர்ச்சகர் மோகன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கோயில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோயில் வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் பழுதான நிலையில் இருந்ததால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கோயில் உண்டியல் உடைத்து திருடப்பட்டது இப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.