பாஜக பிரமுகரிடம் ரூ.3 லட்சம், 35 பவுன் திருட்டு
By DIN | Published On : 09th June 2019 03:04 AM | Last Updated : 09th June 2019 03:04 AM | அ+அ அ- |

பெரியநாயக்கன்பாளையத்தில் பாஜக பிரமுகர் இருசக்கர வாகனப் பெட்டியில் வைத்திருந்த ரூ.3 லட்சம் ரொக்கம், 35 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கவுண்டம்பாளையம், விஜயலட்சுமி நகரில் வசிப்பவர் சுபாஷ் சந்திரபோஸ் (50). இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். சுபாஷ் சந்திரபோஸ் பாஜகவின் கோவை மாவட்ட வர்த்தகப் பிரிவு மாவட்டச் செயலாளராக உள்ளார்.
இவர் பிரிக்கால் அருகிலுள்ள தனியார் வங்கியில் ரூ.3 லட்சம் ரொக்கம், 35 பவுன் நகைகளை வெள்ளிக்கிழமை எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனப் பெட்டியில் வைத்துக்கொண்டு ஸ்டியோவுக்கு வந்தார். தனது கடைக்குக் கீழ் உள்ள வாகன நிறுத்தத்தில் வண்டியை நிறுத்தி விட்டு மேலே கடைக்கு சென்று பணிகளை முடித்துவிட்டு வந்து பார்க்கும்போது வாகனப் பெட்டி உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த பணம், நகைகள் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் சுபாஷ் சந்திரபோஸ் புகார் அளித்தார். இதற்கிடையே ஸ்டிடுயோ அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் சுபாஷை மர்மநபர்கள பின்தொடரும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அதனைக்கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல வித்யாலய மேட்டிலுள்ள தாமு நகரில் உள்ள வீடுகளில் சனிக்கிழமை அதிகாலை திருட்டு முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.