நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்
By DIN | Published On : 14th June 2019 08:50 AM | Last Updated : 14th June 2019 08:50 AM | அ+அ அ- |

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் வியாழக்கிழமை முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும், அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும், தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணக் கொள்ளையைத் தடுக்க வேண்டும், புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, கோவை மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் டவுன்ஹால் பகுதியில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில துணைத் தலைவர் நிருபன் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாவட்டத் தலைவர் தினேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.காவியா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, முதன்மைக் கல்வி அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்த மாணவர் சங்கத்தினரை தடுத்து நிறுத்திய போலீஸார், போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் எனவே அனைவரையும் கைது செய்ய இருப்பதாகவும் கூறினர். ஆனால் மாணவர் சங்கத்தினரோ, முதன்மைக் கல்வி அலுவலரைச் சந்தித்து மனு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு போலீஸார் அனுமதி அளிக்காத நிலையில், மாணவர் சங்கத்தினர் தடையை மீறி அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர்.
இதையடுத்து போலீஸாருக்கும், மாணவர் சங்கத்தினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் உள்ளிட்ட அனைவரையும் போலீஸார் கடுமையான பலப்பிரயோகத்தை பயன்படுத்தி வாகனத்தில் ஏற்ற முயன்றனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவியரே பலருக்கு ரத்தக் காயங்கள் ஏற்பட்டன. ஜனநாயக முறையில் மனு அளிக்க முயன்ற மாணவிகளிடம் ஆண் காவலர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டதாக சங்கத்தின் மாநில துணைத் தலைவர் நிருபன் சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் குற்றஞ்சாட்டினார். கைது செய்யப்பட்ட 10 மாணவிகள் உள்ளிட்ட 27 பேர் இரவில் விடுவிக்கப்பட்டனர்.