ஓய்வுபெற்ற செவிலியரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தது வடமாநில தம்பதியா? போலீஸார் விசாரணை
By DIN | Published On : 22nd March 2019 07:20 AM | Last Updated : 22nd March 2019 07:20 AM | அ+அ அ- |

ஓய்வுபெற்ற செவிலியர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் வடமாநிலத்தவர்களாக இருக்க வாய்ப்புள்ளதாகப் போலீஸார் தெரிவித்தனர்.
கோவை, சௌரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகரைச் சேர்ந்தவர் விஜய ஆனந்தன் (74). இவரது மனைவி மேரி ஏஞ்சலின் (70), ஓய்வுபெற்ற செவிலியர். இவர்கள் சௌரிபாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே இவர்களுக்குச் சொந்தமான மற்றொரு வீடும் உள்ளது. இந்த வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் இவர்களது வீட்டுக்கு தங்களை கணவன், மனைவி என அறிமுகப்படுத்திக்கொண்ட இருவர் வீடு வாடகைக்கு வேண்டும் என மேரி ஏஞ்சலினிடம் திங்கள்கிழமை கேட்டுள்ளனர். இதையடுத்து விஜய ஆனந்தன் வீட்டுச் சாவியை எடுத்து தனது மனைவியிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். நீண்ட நேரமாகியும் மேரி ஏஞ்சலின் திரும்பாததையடுத்து விஜயஆனந்தன் பக்கத்தில் உள்ள வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் உள் அறையில் கழுத்து அறுபட்ட நிலையில் மேரி ஏஞ்சலின் சடலம் கிடந்துள்ளது. மேலும், அவர் அணிந்திருந்த 6 பவுன் நகை திருடப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் குறித்து பீளமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதில் மேரி ஏஞ்சலினின் வீட்டில் இருந்து வெளியே வரும் வடமாநிலத்தவர் போன்ற தோற்றமுடைய தம்பதி அவசர அவசரமாக இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இவர்கள் யார் என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...