பொள்ளாச்சி வழக்கில் சி.பி.சி.ஐ.டி. சம்மன்: காங்கிரஸ் செயல் தலைவர் ஆஜர்
By DIN | Published On : 22nd March 2019 08:02 AM | Last Updated : 22nd March 2019 08:02 AM | அ+அ அ- |

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்குக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச விடியோ எடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரைத் தாக்கியதாக "பார்' நாகராஜ், பாபு, செந்தில், வசந்தகுமார் ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையிலான குழுவினர் விசாரித்து வரும் நிலையில், திருநாவுக்கரசை 4 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு திருநாவுக்கரசு கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் கடந்த மாதம் 12-ஆம் தேதி, தான் கோவையில் இருந்ததாகவும், காங்கிரஸ் நிர்வாகி மயூரா ஜெயக்குமாரை சந்திப்பதற்காக கட்சி அலுவலகம் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மயூரா ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்த முடிவு செய்த போலீஸார், அவரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தனர். இதைத் தொடர்ந்து காவல் பயிற்சிப் பள்ளி மைதான வளாகத்தில் உள்ள அலுவலகத்துக்குச் சென்ற மயூரா ஜெயக்குமார், காவல் துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் கட்சியின் மாநில செயல் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு கோவை அலுவலகத்துக்கு வந்திருந்தேன். இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் என்னை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். அன்றைய தினம் பொள்ளாச்சியில் இருந்து கட்சியின் முன்னாள் உறுப்பினர் கனகராஜ், உறுப்பினர் ராஜசேகர் உள்ளிட்டோர் 40-க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் என்னை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
அப்போது பொதுமக்களில் ஒருவராக திருநாவுக்கரசு வந்திருந்தது தெரியவந்துள்ளது. அன்றைய நாளில் நான் தனிப்பட்ட முறையில் யாரையும் சந்திக்கவில்லை. மேலும் திருநாவுக்கரசை யார் என்றே எனக்குத் தெரியாதபோது அவருடன் பேசுவதற்கு எந்த அவசியமும் ஏற்படவில்லை. மேலும் எனக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாகத் திருநாவுக்கரசும் சொல்லவில்லை. எனவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதேபோல் அவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இல்லை என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...