யானைகள் முட்டித் தள்ளியதில் மளிகைக் கடை சேதம்
By DIN | Published On : 22nd March 2019 07:58 AM | Last Updated : 22nd March 2019 07:58 AM | அ+அ அ- |

வால்பாறை எஸ்டேட் பகுதிக்கு வந்த யானைகள் அங்குள்ள மளிகை கடையை முட்டி தள்ளி சேதப்படுத்தின.
வால்பாறை அடுத்துள்ள ஷேக்கல்முடி எஸ்டேட்டை ஒட்டியுள்ள வனங்களில் யானைகள் அதிக அளவில் உள்ளன. இரவு நேரத்தில் அவ்வழி சாலைகளில் யானைகள் நடமாட்டம் தொடர்ந்து காணப்படும். இந்நிலையில் கடந்த ஷேக்கல்முடி எஸ்டேட் கல்யாணப்பந்தல் டிவிஷன் பகுதிக்கு புதன்கிழமை இரவு கூட்டமாக வந்த யானைகள் அங்குள்ள சித்திரைகுமார் என்பவருக்குச் சொந்தமான மளிகைக் கடையை முட்டித் தள்ளியதோடு உள்ளிருந்த பொருள்களையும் சேதப்படுத்திச் சென்றன. தகவலறிந்து அப்பகுதிக்கு சென்ற வனத் துறையினர் யானைகளை அருகில் உள்ள வனத்துக்குள் விரட்டினர்.
சோமையனூரில்...
இதேபோல் கணுவாயை அடுத்த சோமையனூரில் திருவள்ளுவர் நகருக்குள் வியாழக்கிழமை அதிகாலை புகுந்த யானை ஆறுமுகப்பாண்டி என்பவருக்குச் சொந்தமான மளிகைக்கடை ஷட்டரை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளை வெளியே இழுத்துப் போட்டுத் தின்றது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் வனத் துறைக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பட்டாசுகளை வெடித்து யானையை மீண்டும் காட்டுக்குள்
விரட்டினர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...