கமல்ஹாசன் கூட்டம் நடத்திய தனியார் பள்ளி மீது வழக்குப் பதிவு
By DIN | Published On : 28th March 2019 09:33 AM | Last Updated : 28th March 2019 09:33 AM | அ+அ அ- |

கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், மருத்துவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய தனியார் பள்ளி மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்
கோவையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். இதற்கு முன்னதாக கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இதுகுறித்து தகவலறிந்த சிங்காநல்லூர் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு நேரில் சென்று தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது உரிய அனுமதியின்றி இதுபோன்ற கூட்டம் நடத்தக் கூடாது என்று தெரிவித்தனர்.
இதையடுத்து ஆலோசனைக் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும், உரிய அனுமதியின்றி கூட்டம் நடத்த அனுமதி வழங்கியது ஏன் என்று பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு உதவி தேர்தல் அலுவலர் பிரபாகரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதற்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த விளக்கம் தேர்தல் பிரிவு அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதைத் தொடர்ந்து உரிய அனுமதியின்றி கூட்டம் நடத்தியது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு உதவி தேர்தல் அலுவலர் பிரபாகரன், சிங்காநல்லூர் போலீஸாரிடம் புகார் அளித்தார்.
அதன்பேரில் தனியார் பள்ளி நிர்வாகம் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது, அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...