இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: கோவை தொகுதியில் 14 பேர் போட்டி
By DIN | Published On : 30th March 2019 07:12 AM | Last Updated : 30th March 2019 07:12 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கோவை மக்களவைத் தொகுதியில் 14 பேர் போட்டியிடுகின்றனர்.
மக்களவைத் தேர்தலுக்கான மனு தாக்கல் மார்ச் 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில், கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் உள்ளிட்ட 30 வேட்பாளர்கள் சார்பில் 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 27 ஆம் தேதி நடைபெற்றது. இதில், 23 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
இதில், கோவை மக்களவைத் தொகுதியில் சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக), பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட்), ச.கல்யாணசுந்தரம் (நாம் தமிழர் கட்சி), ரா.மகேந்திரன் (மக்கள் நீதி மய்யம்), ப.கோவிந்தன் (பகுஜன் சமாஜ்), பு.மணிகண்டன் (தமிழ்நாடு இளைஞர் கட்சி) மற்றும் சுயேச்சைகள் என்.ஆர்.அப்பாதுரை (அமமுக), கோ.கனகசபாபதி, வெ.கிருஷ்ணன், மோ.தனபால், எ.நடராஜன், வீ.புஷ்பானந்தம், பே.ராதாகிருஷ்ணன், யு.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 14 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமமுக கட்சி அங்கீகாரம் பெறவில்லை என்பதால் அக்கட்சி வேட்பாளர்கள் சுயேச்சைகளாக கருதப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சியில் 14 பேர்...
பொள்ளாச்சி தொகுதியில் சி.மகேந்திரன் (அதிமுக), கு.சண்முகசுந்தரம் (திமுக), இரா.மூகாம்பிகா (மக்கள் நீதி மய்யம்), உ.சனுஜா (நாம் தமிழர் கட்சி), கணேசமூர்த்தி (பகுஜன் சமாஜ்) மற்றும் சுயேச்சைகள் சு.முத்துகுமார் (அமமுக), எஸ்.அன்சாரி, கே.என்.சண்முகசுந்தரம், வி.சண்முகசுந்தரம், கோ.பாலாஜி, சி.மாணிக்கவேல், சி.முத்துக்குமார், சு.முத்துக்குமார், கே.ராமசாமி, ஆர்.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்ட 14 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை தொகுதியில் கடந்த 2014 தேர்தலில் 25 பேரும், பொள்ளாச்சி தொகுதியில் 18 பேர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...