இளைஞரைக் கடத்தி ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய 5 பேர் கைது
By DIN | Published On : 30th March 2019 07:13 AM | Last Updated : 30th March 2019 07:13 AM | அ+அ அ- |

கோவையைச் சேர்ந்த இளைஞரைக் கடத்தி ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய 5 பேர் கும்பலை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கோவை, கணபதி அருகேயுள்ள வி.ஜி.ராவ் நகரைச் சேர்ந்தவர் அஜய்கர் (28). இவர் லட்சுமி மில்ஸ் பகுதியில் தனியார் வேலைவாய்ப்பு மையம் நடத்தி வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஆவாரம்பாளையம் வழியாக மார்ச் 26 ஆம் தேதி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த ஐந்து பேர் கும்பல் அஜய்கரின் வாகனத்தை மறித்து நிறுத்தி அவரைத் தங்களது காரில் கடத்திச் சென்றனர். பின்னர் அன்றைய இரவு அஜய்கரின் தந்தை பிரபாகரனைத் தொடர்பு கொண்டு, அவரது மகனை விடுவிக்க ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக மாநகர காவல் ஆணையரிடம் தந்தை பிரபாகரன் புகார் அளித்தார். அதன்பேரில் இரண்டு தனிப் படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் விசாரித்து வந்தனர்.
இதில் மிரட்டல் விடுத்த நபர்களின் செல்லிடப்பேசியைக் கண்காணித்தபோது, அவர்கள் கரூர் அருகே இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற தனிப் படையினர் அங்கு தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அஜய்கரை மீட்டனர்.
அவர் அளித்த தகவலின் பேரில் கடத்தலில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம், கரூரைச் சேர்ந்த தினேஷ் (24), பாலாஜி (25), சதீஷ்குமார் (31), திருநெல்வேலி மாவட்டம், கரிசல்குளத்தைச் சேர்ந்த முத்துதுரை (27), திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சேர்ந்த விக்ரமன் (23) ஆகியோரைக் கைது செய்தனர். இதையடுத்து ஐந்து பேரையும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தொழில்போட்டி காரணமாக அஜய்கரைக் கடத்தியதாக கைது செய்யப்பட்வர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...