மாநகராட்சி வரி வசூல் மையங்கள் நாளையும் செயல்படும்
By DIN | Published On : 30th March 2019 07:10 AM | Last Updated : 30th March 2019 07:10 AM | அ+அ அ- |

கோவை மாநகராட்சி வரி வசூல் மையங்கள் ஞாயிற்றுக்கிழமையும் (மார்ச் 31) செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு 2018-19 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது அரையாண்டு வரையிலான காலத்துக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட வரியினங்களை பொதுமக்கள் உடனடியாக செலுத்த ஏதுவாக, மாநகராட்சி வரி வசூல் மையங்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வருகின்றன.
மேலும், மாநகராட்சியின் இணையதளம் மூலமாகவும் சொத்து வரி, குடிநீர் கட்டண நிலுவைகளைச் செலுத்தலாம். நடப்பு நிதியாண்டின் கடைசி நாளான மார்ச் 31 ஆம் தேதியும் அனைத்து வரி வசூல் மையங்களும் வழக்கம்போல செயல்பட உள்ளன. எனவே, மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் வரியினங்களை நிலுவையில் வைத்துள்ள வீடு, கடைகளின் உரிமையாளர்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு உடனடியாக நிலுவைத் தொகையைச் செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் தவிர்த்து, மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...