செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட 220 கிலோ மாம்பழங்கள் அழிப்பு
By DIN | Published On : 05th May 2019 03:42 AM | Last Updated : 05th May 2019 03:42 AM | அ+அ அ- |

கோவையில் ரசாயன மூலம் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 220 கிலோ மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனர்.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ரசாயன முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தலைமையில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் மாநகரில் உள்ள மாம்பழ குடோன்கள் மற்றும் கடைகளில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கணபதி சத்தி சாலையில் உள்ள நான்கு மாம்பழம் விற்பனை நிலையங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் எத்திலின் ரசாயனம் மூலம் செயற்கையான முறையில் 220 கிலோ மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் அளித்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களை குப்பையில் கொட்டி அழித்தனர்.
மேலும், ஆய்வின்போது, மாம்பழம் வைக்கப்பட்ட இடத்தில் கார்பைடு கற்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.
இதேபோல், சூலூரில் பழக்கடைகள், குளிர்பானக் கடைகள் உள்ளிட்ட 25 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், அழுகிய நிலையில் இருந்த 35 கிலோ மாம்பழம், 15 கிலோ முலாம் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.