பொள்ளாச்சி அருகே வால்பாறை சாலையில் வேன் கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் 4 மாணவிகள் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
உடுமலை அடுத்த ராகல்பாவி பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் கல்லூரி துணை முதல்வர் உள்ளிட்ட 8 பேர் மாணவர் சேர்க்கைக்காக வெள்ளிக்கிழமை காலை வேனில் வால்பாறை சென்றுள்ளனர்.
வால்பாறையில் மாணவர் சேர்க்கைக்கான பணியை முடித்துவிட்டு சனிக்கிழமை மாலை ராகல்பாவி திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, வால்பாறை சாலையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் வேனை ஓட்டி வந்த உடுமலையைச் சேர்ந்த மணிகண்டன் (29), மாணவிகள் மோனிஷா(21), நித்யா (20), தேவி (20), கீர்த்தி (20), கல்லூரி துணை முதல்வர் ராஜா (38), பேராசிரியை செளந்தர்யா (35), பேராசிரியர் திலீபன் (40) உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு துறையினர் வேனில் இருந்து 8 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் படுகாயமடைந்த மோனிஷா, கீர்த்திஆகியோர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து ஆழியார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.