போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரம்: பொள்ளாச்சியில் 14 பேர் கைது
By DIN | Published On : 05th May 2019 11:59 PM | Last Updated : 05th May 2019 11:59 PM | அ+அ அ- |

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சேத்துமடை ரிசார்ட்டில் (கேளிக்கை விடுதி) போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் 14 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கேரளத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 159 பேர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சேத்துமடையில் உள்ள ரிசார்ட்டில் மது மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்தி ரகளையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று கல்லூரி மாணவர்கள் 159 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் அனைவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி மாலையில் விடுவித்தனர்.
இந்நிலையில், அனுமதியின்றி ரிசார்ட் அமைக்கப்பட்ட இடத்தின் உரிமையாளர் சேத்துமடையைச் சேர்ந்த ஜெய்கணேஷ் (45), வருண் பிரதீப் (25), ரிசார்ட் மேற்பார்வையாளர் ஆனைமலையைச் சேர்ந்த கமால் (27), ஊழியர்கள் திண்டுக்கல் கருப்புசாமி (25) மதன்குமார் (18) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதுதவிர, ரிசார்ட்டில் தங்கி போதை மருந்து பயன்படுத்தியதாக கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த அர்ஜுன் ஆனந்த் (23), கொச்சியைச் சேர்ந்த ஜெர்ரின் (23), பாலக்காட்டைச் சேர்ந்த விஷ்ணு விஜயன் (23), கரூரைச் சேர்ந்த ஆகாஷ் (20), கேரளத்தைச் சேர்ந்த முஹமது சனீஸ் (25), முஹமத் ஆஷிக் (25), காரந் தல்வார் (34), ரஷிய நாட்டைச் சேர்ந்த இலிசோரின் (30), கோவை, உக்கடத்தைச் சேர்ந்த முசாமி நசிர் (23) உள்பட 14 பேரை போலீஸார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதில், ரஷிய நாட்டைச் சேர்ந்த இலிசோரின் மட்டும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அனுமதியின்றி ரிசார்ட் நடத்தி வந்த சேத்துமடையைச் சேர்ந்த பாபுவை ஆனைமலை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும், இதைப் போல வேறு எங்கெல்லாம் அனுமதியின்றி கேளிக்கை விடுதிகள் செயல்பட்டு வருகின்றன என்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமைத்துள்ள தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.