உன்னதமான மொழி பெயர்ப்பாளர்களில் ஒருவராக என கவிஞர் புவியரசு திகழ்வதாக கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் புகழாரம் சூட்டினார்.
கோவை, இடையர்பாளையம் காந்தியடிகள் கல்வி நிறுவனத்தில், காந்தியடிகள் தமிழ்ப் பண்பாட்டு மையம், நந்தினி பதிப்பகம் சார்பில் கவிஞர் புவியரசு எழுதிய கண்மணி சோபியா அறிவியல் புதினம் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கே.ஏ. சுப்பிரமணியம் வரவேற்றார்.
கவிஞர் புவியரசு தலைமை வகித்தார். கவிஞர்கள் பெ.சிதம்பரநாதன், உமாமகேஸ்வரி, முனைவர் அருள் சீலி, திருநங்கை பத்மினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கவிஞர் புவியரசு எழுதிய நூலை வெளியிட்டு கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் சிறப்புரை ஆற்றி பேசியதாவது:
70 க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்களை கவிஞர் புவியரசு எழுதியுள்ளார். 10 உன்னதமான மொழிபெயர்ப்பாளர்களை வரிசைப்படுத்தினால், புவியரசின் பெயர் அதில் நிச்சயம் இடம்பெறும். வானம்பாடி இயக்கம் கோவையில் தொடங்கப்பட்டபோது, மரபுக் கவிஞர்கள் உள்பட பல எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள் புதுக் கவிதைக்கு எதிராகவும், வானம்பாடி இயக்கத்துக்கு எதிராகவும் போர்க் கொடி தூக்கினர்.
அந்த சமயத்தில் வானம்பாடி இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்களில் புவியரசு முக்கியமானவர். அதன்பிறகு, நாளடைவில் மரபுக் கவிஞர்களும், புதுக்கவிதை எழுதத் தொடங்கினர். மொழிப் பெயர்ப்பு, புதினம், கவிதை நூல்கள் பல படைத்து தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது நிகரற்ற படைப்புகள் பல பரிசுகளை வென்றுள்ளன. மாபெரும் எழுத்தாளராக, மொழிப் பெயர்ப்பாளராக விளங்கிய அவரை உள்ளுரில் சிறப்பாகக் கொண்டாடவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு என்றார்.
இறுதியில் கவிஞர் புவியரசு ஏற்புரை ஆற்றினார். நந்தினி பதிப்பக நிர்வாகி வேனில் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.