ஊழியர் மர்மச் சாவு: உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்: லீமாரோஸ் மார்ட்டின் வலியுறுத்தல்
By DIN | Published On : 05th May 2019 11:59 PM | Last Updated : 05th May 2019 11:59 PM | அ+அ அ- |

மார்ட்டின் குழுமத்தின் காசாளர் பழனிசாமி இறப்பு குறித்து காவல் துறையினர் அனைத்துக் கோணங்களிலும் விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று இந்திய ஜனநாயக கட்சியின் மாநில துணை பொதுச்செயலரும், தொழிலதிபர் மார்ட்டினின் மனைவியுமான லீமாரோஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எங்களது மார்ட்டின் குழுமத்தில் கடந்த 25 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த பழனிசாமி வெள்ளிக்கிழமை (மே 3) உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து காரமடை போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையின்படி வருமான வரித் துறையினர் ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக இறந்தார் என்ற விவரம் எங்களுக்குத் தெரியவந்துள்ளது. பழனிசாமியின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து வரும் நிலையில், காவல் துறையினர் இதுகுறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து அவரது இறப்புக்கான உண்மையான காரணத்தை வெளிக்கொண்டு வர வேண்டும்.
எனது கணவர் மார்ட்டின் கடந்த 2 நாள்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறார். அவரிடம் பழனிசாமியின் இறப்பு குறித்து தெரிவித்தேன். அவர் மிகுந்த மன வருத்தம் அடைந்துள்ளார் என்று லீமாரோஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...