சூலூர் தொகுதியில் முறைப்படுத்தப்பட்ட ஜவுளிச் சந்தை அமைக்க வேண்டும்: அத்திக்கடவு - கௌசிகா நதி மேம்பாட்டுச் சங்கம் வலியுறுத்தல்
By DIN | Published On : 05th May 2019 03:48 AM | Last Updated : 05th May 2019 03:48 AM | அ+அ அ- |

சூலூர் தொகுதியில் முறைப்படுத்தப்பட்ட ஜவுளி சந்தை அமைக்கப்பட வேண்டும் என்று அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டுச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் செயலர் பி.கே.செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்தி:
சூலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நீர்வழிப் பாதைகளை தூர்வாரி, ஏரிக் கரைகளை பலப்படுத்தி தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும். கௌசிகா நதி பாதையில் உள்ள கழிவுநீரை சுத்திகரித்து அதன் கரைகளில் நாட்டு மரங்களை நட வேண்டும்.
கிட்டாம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கௌசிகா குளத்தை புனரமைப்பதன் மூலம் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதேபோல, கௌசிகா நதியின் அரசூர்-கணபதிபாளையம் கிளை ஓடையை அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் சேர்க்க வேண்டும். இதன்மூலம் மோப்பிரிபாளையம் பேரூராட்சி, கிட்டாம்பாளையம் ஊராட்சி, நாராணாபுரம் ஊராட்சி பயனடையும். சூலூர் குளம், ஆச்சான் குளம், சாமளாபுரம் குளத்தை தூர்வார வேண்டும்.
அத்திக்கடவு இரண்டாவது திட்டத்தில் சின்னவேடம்பட்டி ஏரி இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியின் நீர் வழிப்பாதை செல்லும் சின்னியம்பாளையம், நீலாம்பூர், முதலிபாளையம், அரசூர், கணியூர் பகுதிகளில் உள்ள குளம் குட்டைகளை அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் இரண்டாவது திட்டத்தில் இணைத்து நிறைவேற்ற வேண்டும்.
சுல்தான்பேட்டை வழியாக செல்லும் பிஏபி வாய்க்காலில் இருந்து சுல்தான்பேட்டை ஒன்றியம் செலக்கரச்சல் மற்றும் வடக்கு பகுதியில் உள்ள குளங்களுக்கு பம்பிங் சிஸ்டம் மூலம் நீர் நிரப்ப வேண்டும்.
சோமனூர், கருமத்தம்பட்டி, தென்னம்பாளையம் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும்.
சூலூர் தொகுதி பெருமளவு விசைத்தறி தொழில் அதிகம் பேர் உள்ளதால் முறைப்படுத்தப்பட்ட ஜவுளிச் சந்தை தொடங்க வேண்டும்.
கருமத்தம்பட்டி பகுதியில் அரசு கொள்முதல் நிலையம் மற்றும் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க வேண்டும். மேலும், கருமத்தம்பட்டி பகுதியில் ஏழை மாணவர்கள் பயனைடயும் வகையில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...