மார்ட்டின் நிறுவன கணக்காளர் மர்ம சாவு: பிரேதப் பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு: கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவு
By DIN | Published On : 05th May 2019 03:49 AM | Last Updated : 05th May 2019 03:49 AM | அ+அ அ- |

மார்டின் நிறுவன கணக்காளர் மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், வெள்ளக்கிணறு உருமண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (45). இவர் கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியிலுள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில் 25 ஆண்டுளாக கணக்காளராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், ஏப்ரல் 30 ஆம் தேதி மார்ட்டின் நிறுவனத்தில் வருமான வரித் துறை துணை இயக்குநர் சீனிவாசன் தலைமையில் 20 க்கு மேற்ப்பட்டோர் சோதனை நடத்தினர். அப்போது, கணக்காளர் பழனிசாமியிடம் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந் நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டை விட்டுச் சென்ற பழனிசாமி மேட்டுப்பாளையம் அருகே வெள்ளியங்காடு ஓடையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து காரமடை போலீஸார் பழனிசாமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சந்தேக மரணம் மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக வருமான வரித் துறை அதிகாரிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அவரது மனைவி சாந்தாமணி, மகன் ரோகின்குமார் மற்றும் அவர்களது உறவினர்கள் பழனிசாமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பிரேதப் பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, பெரியநாயக்கன்பாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சம்பவத்தை செல்லிடப்பேசியில் பதிவு செய்த கோவை மாவட்ட க்யூ பிரிவு காவலர் கிருஷ்ணமூர்த்தியை சாந்தாமணியின் உறவினர்கள் தாக்கியதில் அவர் காயமடைந்தார்.
மேலும், பழனிசாமியின் உடலை விடியோ பதிவுடன் நீதிபதி முன் பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கான வசதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இல்லாததால் பழனிசாமியின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆட்சியரிடம் மனு...
கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றத்தில் உயிரிழந்த பழனிசாமியின் மகன் ரோகின்குமார் (19) சனிக்கிழமை மனு தாக்கல் செய்தார். அதில், மீட்கப்பட்ட எனது தந்தை பழனிசாமியின் உடலில் காயங்கள் மற்றும் மூக்கில் வெட்டுக் காயம் இருந்தது.
எனவே, அவரது மரணம் இயற்கையானதல்ல. ஆகவே, குற்ற விசாரணை முறைச் சட்டத்தின்படி சடல விசாரணை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவரைக் கொண்டு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதனை விடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதையடுத்து, கோட்டாட்சியர் விசாரணைக்கு ஆட்சியர் கு.ராசாமணி உத்தரவிட்டார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...