வனத்துறை அமைத்த குட்டைகளில் யானைகள் குதூகலம்
By DIN | Published On : 05th May 2019 01:19 AM | Last Updated : 05th May 2019 01:19 AM | அ+அ அ- |

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனத் துறை அமைத்த குட்டைகளில் காட்டு யானைகள் நீர் அருந்தியும் குளித்தும் மகிழ்கின்றன.
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இது திருப்பூர், பொள்ளாச்சி என இரண்டு கோட்டங்களாகவும், பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி, உடுமலை, அமராவதி என ஆறு வனச்சரகங்களாகவும் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
புலி, சிறுத்தை, செந்நாய், யானை, காட்டு மாடு, ராஜநாகம், பல்வேறு வகையான பறவைகள் என பல்லுயிரிகளின் வாழ்விடமாக ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது.
இங்கு கடும் வறட்சி நிலவியதால், குட்டைகள், தண்ணீர்த் தொட்டிகளை அமைத்து வனத் துறையினர் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.
பொள்ளாச்சி வனச் சரகத்தில் அமைக்கப்பட்டுள்ள குட்டையில் யானைகள், மான்கள், பறவைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பலவகை உயிரினங்கள் வந்து தண்ணீர் அருந்திச் செல்வதுடன், குளித்தும் மகிழ்கின்றன.
வனக் குட்டைகளில் தண்ணீர் குறைந்தால் உடனே நிரப்புவது போன்ற பணிகளை பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனத் துறையினர் செய்து வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...