அரசு கேபிள் டி.வி. கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்த வசதி ஏற்படுத்த கோரிக்கை
By DIN | Published On : 15th May 2019 07:24 AM | Last Updated : 15th May 2019 07:24 AM | அ+அ அ- |

தமிழக அரசின் கேபிள் டி.வி. நிறுவனத்துக்கான கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்துவதற்கு வசதி செய்யும்படி கோயமுத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் சார்பில் அரசு கம்பிவட கழக இயக்குநருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ் மூலமாக சேனல்களை பார்த்து வரும் வாடிக்கையாளர்கள் இதற்காக அந்தந்த பகுதி முகவர்கள் மூலமாக தொகை செலுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முகவர்களிடம் தொகை செலுத்த இயலாதவர்கள் குறிப்பிட்ட சேனல்களைப் பார்க்க இயலாத வகையில் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. சேனல்களின் சேவைக்கான காலக்கெடு பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்குத் தெரிவதில்லை. இது தொடர்பாக முகவர்களும் தகவல் தெரிவிப்பதில்லை.
இதனால் குறிப்பிட்ட தேதியைத் தாண்டி பணம் செலுத்துபவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் தற்போது இணையதளம் மூலமாகவே மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு கட்டணங்கள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், கேபிள் டி.வி.க்கான மாதாந்திர கட்டணத்தையும் இணையதளம் மூலமாகவே அரசுக்கு செலுத்தும் வகையில் உரிய வசதி கொண்டு வர வேண்டும். தனியார் செட்டாப் பாக்ஸ் நிறுவனங்கள் இந்த வசதியை வைத்திருக்கும் நிலையில், அரசும் உரிய நடவடிக்கை எடுத்து வாடிக்கையாளர்களுக்கு உதவிட வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.