சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ஆய்வு
By DIN | Published On : 15th May 2019 07:19 AM | Last Updated : 15th May 2019 07:19 AM | அ+அ அ- |

சிங்காநல்லூர் பேருந்து நிலையம் மற்றும் அம்மா உணவகத்தில், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்ன ராமசாமி தூய்மைப் பணிகளை பார்வையிட்டு செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினார்.
கோவை, சிங்காநல்லூரில் கடந்த 2 நாள்களாக மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணிகள் முறையாக நடைபெற்று வருகிறதா என்று மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்ன ராமசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து சுகாதார ஆய்வாளர்களிடம் கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து, சிங்காநல்லூர் அம்மா உணவகத்தில் ஆய்வு நடத்திய அவர், அங்கு விலைப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்படுகிறதா என்று அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து, அங்குள்ள பணியாளர்கள் வருகைப் பதிவேட்டைப் பார்வையிட்டார். மேலும் அம்மா உணவகம் தூய்மையான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தார். இதையடுத்து, இந்திரா நகரில் தூய்மைப் பணிகள் நடைபெறுவதையும், சிங்காநல்லூர் குளத்தில் தன்னார்வ அமைப்புகளால் நடைபெற்று வரும் மரம் நடும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் ம.செல்வம், நகர் நல அலுவலர் கே.சந்தோஷ்குமார் மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.