தற்காலிக பல் மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: பல் மருத்துவ சங்கம் வலியுறுத்தல்
By DIN | Published On : 15th May 2019 07:18 AM | Last Updated : 15th May 2019 07:18 AM | அ+அ அ- |

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக பணியாற்றும் பல் மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என இந்திய பல் மருத்துவ சங்க மாநில நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் பொள்ளாச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து சங்கத்தின் மாநில தலைவர் அருண்குமார், மாநில நிர்வாகி செந்தாமரை கண்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஒரே ஒரு பல் மருத்துவக் கல்லூரி மட்டுமே செயல்பட்டு வருகிறது. எனவே, வரும் கல்வியாண்டில் கூடுதலாக பல் மருத்துவக் கல்லூரிகளை தொடங்க வேண்டும். மருத்துவமனை பாதுகாப்புச் சட்டத்தில் இந்திய பல் மருத்துவ சங்கத்துக்கு பிரதிநிதித்துவம் தர வேண்டும். பல் மருத்துவமனைக்கு ஆயுர்வேத மருத்துவர்கள் ஆய்வுக்காக வருகின்றனர். இதனால் பல் மருத்துவ துறையில் இருக்கும் பிரச்னைகள் தெரிவதில்லை. இதுகுறித்து முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சரிடம் பல முறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 390 பல் மருத்துவர்கள் தற்காலிக மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றனர்.