தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மீறல்: திமுக, அமமுக மீது நடவடிக்கை கோரி அதிமுகவினர் மனு
By DIN | Published On : 15th May 2019 07:18 AM | Last Updated : 15th May 2019 07:18 AM | அ+அ அ- |

சூலூர் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறிய திமுக, அமமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக வழக்குரைஞர்கள் பிரிவினர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுதொடர்பாக வழக்குரைஞர் டி.ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிமுகவினர் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
சூலூர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட மலைப்பாளையம், பூராண்டம்பாளையம் ஆகிய இரு ஊராட்சிகளிலும் பேருந்து நிழற்கூரை, அரசுக்கு சொந்தமான கட்டடங்கள், குடிநீர்த் தொட்டிகள், பொது சுவர்களில் திமுகவினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
மேலும் பல்வேறு இடங்களில் சின்னத்தையும் வரைந்துள்ளனர். அதேபோல அமமுக கட்சியினரும் தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறி பொது இடங்களில் சின்னத்தை வரைந்துள்ளனர். தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ள நிலையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. எனவே இதுகுறித்து திமுக, அமமுக கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.