முன்விரோதம் காரணமாக 2 இளைஞர்களை கொலை செய்ய முயன்ற கும்பல்: 3 தனிப்படைகள் அமைத்து போலீஸார் விசாரணை
By DIN | Published On : 15th May 2019 07:17 AM | Last Updated : 15th May 2019 07:17 AM | அ+அ அ- |

கோவையில் முன்விரோதம் காரணமாக இரு இளைஞர்களை நான்கு பேர் கொண்ட கும்பல் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக போலீஸார் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர்.
கோவை, கணபதி மோர் மார்க்கெட் மற்றும் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த இரு பிரிவினர் இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் எதிர்கோஷ்டியைச் சேர்ந்த ஒருவரைக் கொலை செய்ய முயன்றது தொடர்பாக கணபதி முதல் வீதி காமராஜர்புரத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் பிரதீப்(19) உள்ளிட்ட 3 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சரவணம்பட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் பிரதீப் தவிர மற்ற 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் நிபந்தனை ஜாமீனில் பிரதீப் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரதீப், கோவை நீதித் துறை நடுவர் மன்றத்தில்
(எண். 2) தினசரி நேரில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார். வழக்கம் போல் பிரதீப் செவ்வாய்க்கிழமை காலை நீதிமன்றத்துக்கு வந்து கையெழுத்திட்டுவிட்டு, தன் நண்பர் தமிழ்வாணனுடன்(22) இருசக்கர வாகனத்தில் உப்பிலிபாளையம் சிக்னல் சந்திப்புக்கு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு எதிரே உள்ள பேருந்து நிறுத்தம் அருகே இவர்கள் சென்றபோது, பின்னால் 2 இருசக்கர வாகனங்களில் இவர்களைத் தொடர்ந்து வந்த நான்கு இளைஞர்கள் பிரதீப் மற்றும் தமிழ்வாணனை வழிமறித்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கூச்சலிட்டதை அடுத்து ஆயுதங்களுடன் வந்த நால்வரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து மாநகர சட்டம் - ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் மற்றும் ரேஸ்கோர்ஸ் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த பிரதீப், தமிழ்வாணன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தங்களைத் தாக்கிய நான்கு பேரின் அடையாளங்களையும் பிரதீப் மற்றும் தமிழ்வாணன் ஆகியோர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை முயற்சி நடந்துள்ளதாகவும், ஓரிரு நாள்களில் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவர் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.