வரத்து குறைந்ததால் பட்டுக் கூடுகள் விலை உயர்வு
By DIN | Published On : 15th May 2019 07:16 AM | Last Updated : 15th May 2019 07:16 AM | அ+அ அ- |

கோவை பட்டுக்கூடு கொள்முதல் மையத்துக்கு பட்டுக்கூடுகள் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை அதிகரித்துள்ளது.
கோவையில் மாநில அரசின் பட்டுக்கூடு கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது. கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடுகளை விவசாயிகள் இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இங்கு நடைபெறும் ஏலத்தில் வியாபாரிகள் பங்கேற்று கூடுகளை வாங்கிச் செல்கின்றனர். ஞாயிற்றுக் கிழமை தவிர மற்ற 6 நாள்களும் ஏலம் நடத்தப்படுகிறது. சராசரியாக 1,500 முதல் 1,800 கிலோ பட்டுக் கூடுகள் வரத்து உள்ளது. இந்நிலையில் கடந்த ஒருமாதமாக பட்டுக்கூடு உற்பத்தி குறைந்துள்ளது.
இது தொடர்பாக பட்டு வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர், பேரூர், அன்னூர், பெரியநாயக்கன்பாளையம், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த சில நாள்களாக காணப்படும் பருவநிலை, வெயிலின் தாக்கம் உள்ளிட்ட காரணத்தால் 20 - 30 சதவீதம் வரை பட்டுக்கூடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதுமே பட்டுக்கூடு உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது. கோவை பட்டுக்கூடு கொள்முதல் மையத்துக்கு 1800 கிலோ பட்டுக் கூடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். ஆனால் தற்போதைய நிலையில் 800 முதல் 1000 கிலோ வரைதான் வரத்து காணப்படுகிறது. இதனால் விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் பட்டுக்கூடு கிலோ ரூ. 300 முதல் ரூ.330 வரை விற்பனையானது. தற்போது ரூ.350 முதல் ரூ.380 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றனர்.