வேளாண்மை படிப்புகளுக்கு இதுவரை 29,238 மாணவர்கள் விண்ணப்பம்
By DIN | Published On : 15th May 2019 07:30 AM | Last Updated : 15th May 2019 07:30 AM | அ+அ அ- |

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2019-20 ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்காக இதுவரை 29,238 மாணவ, மாணவியர் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்புக் கல்லூரிகள், 27 இணைப்புக் கல்லூரிகள் மூலம் நடத்தப்படும் 10 பட்டப் படிப்புகளில் உள்ள 3,905 இடங்களை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கடந்த 8-ஆம் தேதி தொடங்கின. இதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் விண்ணப்பங்களைப் பதிவு செய்யத் தொடங்கினர். முதல் நாளிலேயே 8,966 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், மே 10-ஆம் தேதி வரை 16,737 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை வரையிலும் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 29,238 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 48,676 மாணவ, மாணவியர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்திருந்த நிலையில், 32,621 பேர் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஜூன் 7ஆம் தேதி கடைசி நாள். இந்த ஆண்டு வேளாண்மை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.