அன்னூரில் கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்தன
By DIN | Published On : 19th May 2019 05:40 AM | Last Updated : 19th May 2019 05:40 AM | அ+அ அ- |

அன்னூரில் பெய்த கனமழையால் வெள்ளிக்கிழமை மாலை 20 மரங்கள் முறிந்து விழுந்தன.
அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. இதில் சத்தி சாலையில் சி.எஸ்.ஐ. சர்ச் எதிரே உள்ள மரம் முறிந்து விழுந்தது. அதேபோல் அவிநாசி சாலையில் உள்ள மரம் அந்த வழியாக வந்த பேருந்தின் மீது விழுந்தது. கூத்தாண்டவர் கோயில் வீதியில் மின்கம்பம் முறிந்து விழுந்தது.
கோவை சாலையில் தென்னைமரம் முறிந்து விழுந்து வீட்டின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் அன்னூரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மின்சார வாரிய ஊழியர்கள் சனிக்கிழமை காலை இதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலை மற்றும் மின்வாரியத் துறையினர் இணைந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.