ஐம்பெரும் காப்பியங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது கடமை: சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள்
By DIN | Published On : 19th May 2019 05:40 AM | Last Updated : 19th May 2019 05:40 AM | அ+அ அ- |

ஐம்பெரும் காப்பியங்களை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது தலையாய கடமை என்று சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் கூறினார்.
தினமணி நாளிதழ், காந்தியடிகள் தமிழ்ப் பண்பாட்டு மையம், காந்தியடிகள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்தும் ஐப்பெரும் காப்பிய விழா, கல்வி நிறுவனத்தின் பாரதி அரங்கில் சனிக்கிழமை தொடங்கியது. காந்தியடிகள் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் கே.ஏ.சுப்பிரமணியன் வரவேற்றார். கவிஞர் புவியரசு, காந்தியடிகள் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் செயலாளர் ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், கெளமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசும்போது, ஐம்பெரும் காப்பியங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை. வெளிநாடுகளில் பேருந்து நிலையம், உணவு விடுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் தங்களது தாய்மொழியில் தான் பேசுகின்றனர். நமது இளைய தலைமுறையினர் தாய்மொழியைப் படிக்க யோசிப்பது வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில், தமிழில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 5-க்கு 1ஆகக் குறைந்திருக்கிறது என்பது கசப்பான உண்மை. எனவே அடுத்த தலைமுறைக்கு நம் மொழியைக் கொண்டு சென்று, அதை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து, புலவர் சண்முகவடிவேல் விழாவைத் தொடங்கி வைத்து குண்டலகேசி குறித்துப் பேசினார். குண்டலகேசியில் இருப்பது 19 பாடல்கள் தான். உரையாசிரியர்கள் அதை அழகாகக் கதையாக்கிக் கொண்டுள்ளார்கள். சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என 5 பெரும் காப்பியங்களும் பெளத்தம், சமணர்களால் இயற்றப்பட்டவை. இந்தக் காப்பியங்கள் தான் நம்மிடம் இருக்கும் சொத்து. அவற்றை, அழியாமல் பாதுகாக்க முயற்சி எடுத்துள்ள சான்றோர்களை வணங்குகிறேன் என்றார் அவர். இதைத் தொடர்ந்து, வளையாபதி குறித்து புவனகிரி பாரதியார் மெட்ரிக் பள்ளி தாளாளர் ப.அன்பழகன் பேசினார்.
இதையடுத்து, சீவக சிந்தாமணி குறித்து இரா.மாது அறிமுக
உரையாற்றினார்.
நிகழ்ச்சியில், பெல்லம் எம்.பாலசுப்பிரமணிம், பெங்களூர் எம்.பாலசுப்பிரமணியம், தமிழ் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். விழாவின் இரண்டாவது அமர்வு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில், கவிஞர் புவியரசு, கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.