கமல் விவகாரத்தில் வன்முறைப் பேச்சு: அமைச்சரை கைது செய்ய வலியுறுத்தல்
By DIN | Published On : 19th May 2019 05:37 AM | Last Updated : 19th May 2019 05:37 AM | அ+அ அ- |

கமல்ஹாசனின் நாக்கை அறுப்பேன் என வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் சுப்பராயன் கூறினார்.
கோவை ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் சுப்பராயன் சனிக்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கமல்ஹாசன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. கலவரத்தைத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம், கமல்ஹாசனின் கருத்துச் சுதந்திரத்தை தடுக்கும் வகையில் அவரது பிரசாரத்துக்குத் தடை விதித்துள்ளது. இதுதான் ஜனநாயகமா? பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. பிரக்யா தாக்கூரின் கருத்தைக் கண்டிப்பதாகவும், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதாகவும் பாஜக கூறுவது கண்துடைப்பு. உண்மையாகவே நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் அவரை கட்சியில் இருந்து நீக்கியிருக்க வேண்டும்.
கமல்ஹாசனின் நாக்கை அறுப்பேன் என வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உடனடியாக அவரைக் கைது செய்ய வேண்டும். இந்து மதம் குறித்து எந்த இடத்திலும் கமல்ஹாசன் அவதூறாகப் பேசவில்லை. ஆனால், அவருக்கான பிரசார வாய்ப்பு மறுக்கப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது. ஆளும் கட்சியின் கைப்பாவையாகச் செயல்படுவதால்தான் சூலூர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்யவில்லை என்றார்.
பேட்டியின்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் சுந்தரம், மாவட்ட துணைச் செயலாளர் தேவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.